Skip to main content

மூக்குத்தி அம்மன் 2 - நான் பார்த்த படம்

     பட ஆரம்பத்தில் கொஞ்சமாக சகித்துக் கொள்ளூம் அளவுக்கு இருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் போகப்போக நம்மால் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு எகிறி இறுதியில் நம்மை தியேட்டரை விட்டு அடித்து துரத்தும் அளவுக்கு இரைச்சலாக இருக்கிறது பிண்ணனி இசை.  சமீப காலங்களில் படத்தை கொஞ்சம் பில்டப் ஏற்றச் செய்வதில் ஸ்லோ மோஷன் போல இரைச்சல் இசையும் அதீத அளவு பயன்படுத்தப் படுகிறது என்பதால் இசையமைப்பாளரை மட்டும் குறை சொல்ல முடியாது, மிக முக்கியமாக இயக்குனரையும்.  ஆம், ரசிகர்கள் இதனைதான் கொண்டாடுகிறார்கள் எனும்போது, இல்லை மாட்டேன் என சொல்ல திரைக்கலைஞர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல.  திரைத்துறை இதிலிருந்து மீள ரசிகர்கள் வழிவகை செய்தால் ஒழிய இது மாறாது.  ஆனால், எனக்கு ஜனநாயகன் படத்தின் பிண்ணனி இசை பிடித்திருந்தது ஏனோ!

    மறதி தேசிய வியாதி என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை போலும்! கடவுளுக்கும் உண்டென சொல்கிறது மூக்குத்தி அம்மன் (மூக்குத்தி அம்மன் என எழுத வராது பொட்டம்மன் எனவாக  மீண்டும் மீண்டும் எழுதி கொண்டிருக்கிறேன்!!! ஹம்ம்ம்ம்ம்).  மயிலாஞ்சியை மறந்து சோத்து பிழைப்பாக கான்ஸ்டபிள் உத்தியோகம் செய்யும் ஆத்தாவாக நயந்தாரா.  மற்ற காட்சிகளை விட நக்கல் காட்சிகளில் அவர் உடல்மொழி மிக அழகாக பொருந்திப் போகிறது.  ஆத்தாவ பெத்த ஆத்தா பிரசவத்துலேயே இறந்து போக, பிரசவம் பார்த்த நர்ஸே குழந்தைய (தெய்வத்த) தத்தெடுக்க; ஆத்தாவ வளர்த்த ஆத்தாவாக ஊர்வசி.  அவரை மாலாம்மா மாலாம்மா என அழைக்கும் சமயத்தில் வடிவேலு காமெடி நினைவில் வருவதை தடுக்க இயலவில்லை.  சூனியக்காரியாக ரெஜினா கிளாமரா இருக்காங்க, யோகி பாபு எதுக்கு இருக்காருன்னே தெரியல.

    யாரு சாமி இவன் என்பதாக இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து மறுபிறவி எடுத்த இளவரசன்.  அழகிய சூனியகாரியுடனான இவரின் (ரொம்ப லைட்டான) ரொமான்ஸ் காட்சிகள் நான் எதுக்குடா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகணும் என்பது போலாகவே இருந்தது.  இப்பிறவியில் ஒரு அரசியல்வாதியில் மகனாக இருக்கிறார்.  அவர் ஜெயிலுக்கு போவதாகவே அறிமுகம் இருக்கிறது.  அச்சமயத்தில் அப்பா, பிள்ளை, போலீஸ், அடிபொடிகள் என அனைத்தும் ஜெயிலுக்கு போகும் விஷயத்தை பற்றியான ஒரு சில வரிகள், கதாசிரியர் ஒரு குறியீட்டை மக்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறாரோ எனும் ஐயத்தை எழுப்புகிறது.  மீண்டும் மீண்டும் ஒரே வசனத்தை பயன்படுத்த காரணம் என்னவாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டெழ அவரை மூக்குத்தி அம்மன் காப்பாராக.

    கிராபிக்ஸ் படம் முழுக்க வழிந்து ஓடுகிறது.  இருந்த போதிலும் எந்த இடத்திலும் நம்மை மூழ்கடிக்காது, உள்ளங்கால் நனைய ரசித்து வேடிக்கை பார்ப்பது போல இருக்கிறது.  மயிலாஞ்சி ஒரு சில காட்சிகளில் அழகாக இருக்கிறது.  போலீஸ் குடும்பம் கிரிஞ்சாக ஆரம்பித்தாலும், வில்லன்களிடம் தப்பிக்க உதவும் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறது.  நகைச்சுவை காட்சிகள் இடைச்செறுகளாகவே இருக்கிறது.  "நீ கூப்பிட்டா தான் நாங்க வருவோம். இது எங்களோட சத்தியம்" என்பது "நான் பொட்டு வச்சு கூப்பிட்டாதான் நீ வரணும்" என்பதன் மீட்டுருவாக்கம்.  எனினும் பவானியுடன் அவளது அம்மா காண்பித்த பிரம்மிப்பை இன்னொருவரால் பண்ண முடியாது.

    தன்னை காதலித்த இளவரசனை சாத்தான் உதவியுடன் உலகையே ஆள வைக்க முயற்சிக்கும் ஒரு சூனியகாரியின் கதையே மூக்குத்தி அம்மன் 2 படம்.  லாஜிக் எதுவும் பார்க்காம இரண்டு காதுலயும் பஞ்சோட உட்கார்ந்தா கண்டிப்பா படம் நம்மை போரடிக்காது.  சாத்தான துவம்சம் செய்யுற சமயத்துல வர்ற பாட்டுக்கு மூக்குத்தி அம்மனோட அக்காக்கள் இருவர் ஆடும் புள்ளிங்கோ ஸ்டைல் ஆட்டம் இப்பொழுது வரை உறுத்திக் கொண்டிருக்கிறது.

    

Comments

Popular posts from this blog

சைவமாகிய நான்!

  வாரயிறுதிகளில் மட்டும் அசைவம் வாங்கும் வழக்கம் உள்ள வீடு எங்களுடையது.  வீட்டின் நால்வரும் அசைவம் சாப்பிடுவோம்.  முதன்முதலாக உடம்பு சரியில்லை, விரதம் என அடுத்தடுத்து காரணங்கள் வைத்து அசைவம் தவிர்த்த அம்மா இப்பொழுது உடல்நிலை காரணம் காட்டி முழுதும் நிப்பாட்டி கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.  புரட்டாசி மாதம் உள்ளிட்ட சில காரணம் வைத்து சமைப்பதும் இல்லை.  ஒரு சில சடைப்புகள் செய்து இப்பொழுது சமைக்க ஆரம்பித்து இருந்தார். சகோதரியும் இப்பொழுது சைவத்துக்கு மாறிவிட்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக அசைவம் குறைத்த இருவரும் கிட்டதட்ட ஒரே காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டனர்.  முட்டை வைத்திருக்கும் இடத்தை பார்த்தாயா? கோழி கத்துவது பரிதாபமாக இல்லையா? கடையில் வரும் கெட்ட வாடை, சமைக்கும் பொழுது வரும் வாடை, அதனை உண்ட பின் உன் உடலும் நாறும் தெரியுமா? என ஆரம்பித்து அதுகள் என்னென்ன கருமத்தையெல்லாம் திங்கும் தெரியுமா? என அநாவசிய கான்வோக்கள் பின்னர் தந்தையாரை நிதானம் சொல்ல முடியாது என்கிற நிலையில் வீட்டில் நான் மட்டும் நான்வெஜ் என்றானது. ...

பயபக்தியில் சில நேரம்!!!

வழக்கமான வாக்கிங்தான்.     இந்த வாரயிறுதில மாரியம்மன் கோவில் பொங்கலுக்காக தண்ணியெடுத்து ஊத்துற மக்களும் விடியக்காலை நேரத்த ப்ரிஃபர் பண்றாங்க போல.   நிறைய இடங்கள்ல தோண்டி போட்டு வச்சிருக்காங்கங்குறதால என்னோட     ஷு டேமேஜ் ஆயிடுமோன்னு தயக்கத்துல நடந்து போகும் போதே முன்னால சைக்கிள்ல போற ஆள் நடு ரோட்ல எச்சி துப்பிட்டு போறாரு.     அப்பத்தான் கவனிக்கிறேன் கோவிலுக்கு தண்ணீ ஊத்த போற யாரும் செருப்பு போடல, பத்தாக்குறைக்கு ஈரம் சொட்ட சொட்ட நடந்து போறாங்க.     நம்ம நிலைமை பரவால்ல போல. ஆனா இவங்க சாமிய காரணம் வச்சு இந்த அசிங்கத்துலயும், மோசமான ரோட்லயும் செருப்பு போடாம வெறும் கால்ல நடந்து போறாங்களேன்னு கொஞ்சம் பொது நலமா சிந்தனை செல்லும் போது பின்னாடி வந்துட்டு இருந்த கொஞ்ச பேரு… “அவ ஆளு கூட சண்டை போட்டு இப்பல்லாம் எங்கயும் வெளிய போகாம சேர்ந்து போக ஆளும் இல்லாம வீட்லயே தான் கிடக்காலேன்னு பரிதாபப்பட்டு நாளைக்கு எங்க கூட கோவிலுக்கு தண்ணி ஊத்த வாடின்னு கூப்பிட்டா?!”னு காதுல விழ அப்படியே நடை வேகத்தை அவர்களின் வேகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி மீத கதையையும் கேட்டு க...

ஏப்ரல் ஃபூல்…

  காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர்     என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது.     வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது.     இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.     இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.     இந்த நாள் இனிய நாள்.