காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர் என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது. வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது. இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள்.
முந்தைய வருட தீபாவளி பயணம்⛆ ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...
Comments
Post a Comment