வாரயிறுதிகளில் மட்டும் அசைவம் வாங்கும் வழக்கம் உள்ள வீடு எங்களுடையது. வீட்டின் நால்வரும் அசைவம் சாப்பிடுவோம். முதன்முதலாக உடம்பு சரியில்லை, விரதம் என அடுத்தடுத்து காரணங்கள் வைத்து அசைவம் தவிர்த்த அம்மா இப்பொழுது உடல்நிலை காரணம் காட்டி முழுதும் நிப்பாட்டி கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. புரட்டாசி மாதம் உள்ளிட்ட சில காரணம் வைத்து சமைப்பதும் இல்லை. ஒரு சில சடைப்புகள் செய்து இப்பொழுது சமைக்க ஆரம்பித்து இருந்தார்.
சகோதரியும் இப்பொழுது சைவத்துக்கு மாறிவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அசைவம் குறைத்த இருவரும் கிட்டதட்ட ஒரே காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டனர். முட்டை வைத்திருக்கும் இடத்தை பார்த்தாயா? கோழி கத்துவது பரிதாபமாக இல்லையா? கடையில் வரும் கெட்ட வாடை, சமைக்கும் பொழுது வரும் வாடை, அதனை உண்ட பின் உன் உடலும் நாறும் தெரியுமா? என ஆரம்பித்து அதுகள் என்னென்ன கருமத்தையெல்லாம் திங்கும் தெரியுமா? என அநாவசிய கான்வோக்கள் பின்னர் தந்தையாரை நிதானம் சொல்ல முடியாது என்கிற நிலையில் வீட்டில் நான் மட்டும் நான்வெஜ் என்றானது.
இப்பொழுது சமைக்க தெரியும் என்கிற போதிலும், சமைக்க தெரியாத அவர்களின் ஆரம்ப சைவ காலங்களில் மிகவும் இம்சையாகவே இருந்தது. நான்வெஜ் சமைத்து முடித்த பாத்திரங்கள் எதுவும் கிச்சனுக்குள் இருக்க கூடாது, வட்டில் கழுவ கூட சிங்க் பயன்படுத்த கூடாது என அவ்வப்பொழுதைய தீண்டாமைகள் நீளும். தீண்டாமை போலான இத்தகைய தொடர் நிகழ்வுகள் என்னுடைய சகிப்பு தன்மையை முற்றிலுமாக ஒழித்து விட்டது. அந்த கால கட்டத்தில் நானும் விருதுநகர் வீட்டில் மட்டும் வெஜிடேரியனாக இருக்க ஆரம்பித்து விட்டேன்.
கடந்த ஈராண்டுகளாக ஒரு மாற்றம் தெரிந்தது. மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை ஆனால் அது எனக்கு பிடித்திருந்தது. கடை உணவை விட, என்னுடைய சமையலை விட அம்மாவின் சமையலே பிடித்திருந்த காரணத்தால் எனக்கு வேறெதுவும் அதைப்பற்றி கேட்க தோணவில்லை.
மீண்டும் இப்பொழுது அந்த பழைய நிகழ்வுகள் மீள் உருவாக்கம் செய்யப் படுகின்றன.
முந்தைய நிகழ்வுகள் அளவுக்கு வீரியம் இல்லையெனும் போதிலும் நானும் முந்தைய நானாக இருக்க விரும்பவில்லை. கடவுள் நம்பிக்கையின் ஒரு பகுதியாக இது அவர்களுக்கு இருக்கிறது என எண்ணி இனிமேல் அம்மாவின் அசைவ உணவு சமையலை தவிர்ப்பதே அவர்களின் மீது வெறுப்பு ஏற்படுவதை தவிர்க்க உதவும். கடைசியா சாப்பிட்டது 10 நாட்களுக்கு முன்னர் மட்டன் குழம்பு மற்றும் வழக்கத்திற்கு மாறாக எளிதாக கிடைத்தது என ஈரல் குழம்பு.
அம்மாவின் அசைவ உணவிற்கு BYE
Comments
Post a Comment