மனதினில் அவ்வளவு சொற்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால், எவ்வளவு முயற்சித்தும் எதுவும் எழுத வருவதில்லை. இவ்வாறாகிய புலம்பல் மட்டுமே எழுத்தில் எளிதாக வெளியே வருகிறது.
நிஜங்கள் காயப்படுத்துகிறதா, இல்லை நிஜத்தை ஒதுக்கி வைக்கிறேனா! எனும் கேள்வி மேலும் குழப்புகிறது. ஏதாகினும், ஆரம்பித்தால் மட்டும் போதும், மேற்கொண்டு அதுவே பார்த்துக் கொள்ளும் அல்லவா. இங்கு சிக்கல் என்னவெனில், இன்னமும் நான் ஆரம்பிக்கவே இல்லை என்பதே. ஆரம்பித்துவிட்டால், அடுத்து சரியாக செயல்படுமா எனும் கேள்விக்கு... இல்லை என்பதை கடந்த கால நினைவுகள் சம்பவங்கள் பதிலாகச் சொல்கின்றன. ஆக, ஆரம்பிப்பது மட்டும் சிக்கல் இல்லை என்பது ஓரளவுக்கு புரிபடுகிறது. தொடர முடியாமல் இருக்க காரணம் நிறைய அடுக்குகிறேன்.
நேற்றைக்கு கீபோர்டை சாடினேன். அது வேலை செய்யவில்லையெனில், புதிது வாங்கலாம் அல்லவா; ஆனால் அதற்கு காசு செலவாகும் என சொத்தை காரணம் வைத்து தவிர்த்து விட்டதை வைத்து பார்த்தால் என்னுடைய எடுத்துக்காட்டு கடும் உண்மைகள் மூலமாக என்னை காயப்படுத்துகின்றன எனும் வாதமும் வருகிறது.
சில உண்மைகளை ஏற்காமல் அதனை கடக்கவும் இயலாமல் ஏற்படும் திண்டாட்டம், எதிலோ கொண்டு போய் நிறுத்துகிறது. மேற்கூறிய, அனைத்தும் மேலும் புலம்பலாகவே அமைகிறதே ஒழிய இன்னும் அங்கேயே நிற்கிறேன் என்பதே தெளிவாக புரிகிறது.
ஆனால்... ஆனால்... ஆனால்...
மனதில் உள்ள அனைத்தையும் வெளிக்கொணர பயமாக இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட்டால் நல்லது தானே, அனைத்தையும் எழுத்தில் வெளிக்கொணர அவசியமில்லை தானே
சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்டில் ஒருவேளை நான் ஃபிட்டஸ்ட் ஆக இருந்திருந்தால் எப்பொழுதோ தப்பியிருப்பேனே!?
எவ்வளவோ கஷ்டங்கள் கடந்து மகிழ்வோடு வாழும் மக்கள் இருக்கிறார்கள் தானே. அவ்வாறு இருக்க நான் மட்டும் இதில் உழல, நானும் ஒரு முக்கிய காரணமாக உள்ளேன் என்பது திண்ணம்.
குறையாக மட்டுமே கருதாமல், ஓரிடத்தில் நகராமல் தேங்கியிருப்பதை காட்டிலும் நகர்வதற்கு முயற்சி எடுக்கிறாய் எனும் ஒரு விஷயத்திலாவது உனை பாராட்டிக்கொள்ளடா.
முன் செல்!!!
Comments
Post a Comment