Skip to main content

நடை பயில்வோமா...

    தன்னுடைய தின தேவைகளுக்கான தேடலில் நாடோடிகளாக வாழ்ந்த காலம் போய் ஒவ்வொரு தேவைகளாய் தீர்த்து, இன்றைய காலகட்டத்தில் நாகரீக மனிதன் அறிவு தேடல் தவிர்த்த ஏனைய பலவற்றில் தன்னுடைய தேவைகளை கிட்டதட்ட பூர்த்தி செய்து கொண்டான்.  அவனுடைய அறிவு தேடலில் அதிகம் வேலை செய்வதில் மூளை முதலிடத்தை எடுத்து கொள்கிறது.  கால்களும், கைகளும்  தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொண்டால் அது அவனுடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டுகொண்ட அவனுக்கு எளிய தீர்வாக கண்டுகொண்டது தான் நடைபயிற்சி.
    அனைத்து வித பொருட்களும் நகரத்தில் மட்டுமே கிடைக்குமாகையால் கிராம மக்கள் நகரை நோக்கி அவ்வப்பொழுது படையெடுத்து கொண்டே இருந்த காலம் இப்பொழுது இல்லை.  வீட்டிற்கே டெலிவரி என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்ட காலகட்டாத்தில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா உண்ண திருநெல்வேலி வந்து அங்கே கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அவர்களின் வலைதளம் சென்று ஆன்லைன் ஆர்டர் போட்டால் ஒரிரு நாட்களில் அல்வா வீட்டிற்கே வந்துவிடுகிறது.  இது சரியா தவறா என வாதமே ஏற்க முடியாததை போல தான் இன்றைய முன்னேற்றம் சரியா தவறா எனும் வாதமும்... வாங்க நடந்துகிட்டே பேசலாம்.
    நடைபயிற்சி என்பது மிக எளிது போல தோன்றினாலும் அதனை போல மிக கடினமான ஒன்று கிடையவே கிடையாது.  அதிகாலை நடைபயிற்சி என ஆரம்பித்த பலரின் இடைநிற்றலின் காரணம் நியாயமாக இருப்பது போலவே இருக்கும் மாயத்தோற்றம் என்பது தான் இதிலிருக்கும் கொடுங்கூற்று.  நேரமில்லை, காலையில் பனி அதிகம், தெருநாய் தொந்தரவு, இன்னைக்கு தூங்கிட்டேன் என ஆரம்பித்து கால் வலிக்குது, போரடிக்குது என்பதாய் காரணம் நீளும்.  அதுபோல எனக்கும் காரணம் இருக்கும்தானே!?
   
    நடைபயிற்சி ஆரம்பிக்க காரணம் உண்டு, நடைபயிற்சியை தொடர முடியாமல் போக காரணம் உண்டு, நடைபயிற்சியை நிப்பாட்ட காரணம் உண்டு, நடைபயிற்சிக்கென சில உபகரணங்கள் வாங்கியதும் உண்டு.  இவ்வாற் நிறைய உண்டுகள் அவரவரின் நிலைக்கேற்ப இருக்கும்.  என்னுடைய உண்டுகள், இலங்கள் என்னென்ன?

    வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் பார்க் தான் நான் நடைபயிற்சிக்கு தேர்ந்தெடுத்த இடம்.  வாக்கபிள் டிஸ்டன்ஸ் என சொல்ல முடியாது எனும்போதிலும் அவ்வளவு தொலைவு கிடையாது என்றே சொல்லலாம்.  சைக்கிளில் செல்வது தான் வாடிக்கை.  அங்கு மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் தான் அதிகம்.  நடைபயிற்சிக்கென தனி சீருடையில் நிறைய பேரை நான் பார்த்தது இங்குதான்.  அதீத வேர்வை காரணமாக வாடை வந்து விடுகிறதாகையால் தனி உடை என்பதும் பிற்பாடு கொண்ட புரிதல்தான்.

    பார்க் செல்ல வாக்கிங் ஷூவும் இப்பொழுது வாங்கியுள்ளேன்.  அதனை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் செப்பல் அணிவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டேன்,  பாதத்திற்கு அவ்வளவு கம்பர்ட் கொடுக்கிறது.  கடந்த சிறு விபத்து காரணமாக சைக்கிள் அரை வருடம் மேலாக எடுக்கபடாமல் போயிற்று, மிகுந்த தூசியாய் இருப்பதை துடைத்து பயன்படுத்தி பார்க்க வேண்டும்,  சரியாக இல்லாத பட்சத்தில் மீண்டும் ஓவர் ஆயில் போட வேண்டும்.  சைக்கிள் தவிர்த்து பார்த்தோமானால் அலாரம் முதற்கொண்டு அனைத்தும் தயார்.  நாளை காலை நடைபயிற்சி கிளம்புவேன் என்றே எண்ணுகிறேன்.

    வேர்வை மற்றும் வாடை காரணத்திற்காக வாக்கிங் தடைபடாது, அதற்கென தனி உடை இருக்கிறது.  செருப்பு போட்டு நடந்தால் ஒரே வாரத்தில் பாதம், முட்டி வலிக்கிறது, அதற்கென வாக்கிங் ஷு மற்றும் முட்டிக்கு பேண்ட் இருக்கிறது.  நடை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கொடூர பசி எடுக்கிறது, அதனை போக்க முட்டை தயாராக இருக்கிறது.  விடிகாலை அலாரம் விழிப்புடன் இருக்கிறது.

    நாடோடியாய் வாழ்ந்த மனிதனிடம் போய் இன்றைய மனிதர்களின் வாக்கிங் பற்றி சொன்னால் என்ன நினைப்பான்?

Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...