Friday, 20 June 2025

Disney's Snow White

     திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்கலாகவே இருக்கும்.  மேக்கப் போடாதது போல இருந்தாலும் அப்பொழுதுதான் கழுவியது போலான முகம், lipstick இருப்பது போல் தெரியவில்லை, வெட்டபட்ட முடி, சிறிது கசங்கிய உடை. இதனை உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் snow white ஆல் முடியும்.  போலவே தேர்ந்த மேக்கப், அசத்தலான உடை, அளந்து நறுக்கப்பட்ட நகம் இதனுடன் கருப்பு shade சேர்த்து Snow Whiteன் சித்தி எனும் வில்லியை இரண்டாவது உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் அதற்கும் இடம் உண்டு.

    ஒரு நாடு அதற்கு ராஜா, ராணி அவர்களுக்கு பனிபுயலின் சமயம் இன்முகத்துடன் பிறந்த ஒரு பெண் குழந்தை, அந்த குழந்தை தான் Snow White.  அந்த நாட்டு குடிமக்கள் கூட்டமாக சேர்ந்து, ஆப்பிளை பறித்து தோலை சீவி சுவையான pie சமைத்து ஒன்றாக ஆடி, பாடி pie உடன் அன்பினையும் பகிர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

    வாழ்வில் இன்பம் என்பது ஒரு பகுதி போல் துன்பமும் ஒரு பகுதி என்பதிற்கு ஏற்ப சில சம்பவங்கள் நடக்கின்றன;  நோய் வாய்ப்பட்டு  ராணி இறக்கிறார், பின்னர் ராஜா ஒரு அழகியை மணமுடிக்கிறார், அன்றொருநாள் போருக்கு புறப்பட்ட ராஜா அரண்மனை திரும்பவில்லை.  நாட்டின் சூழல் தலைகீழாக மாறுகிறது.

    Snow White சித்தி ராணி ஆகிறார், எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அந்நாட்டின் இளவரசி Snow White கோட்டையின் வேலைக்காரி ஆகிறார்.  சித்திக்கு தன்னுடைய அழகின் மேல் கர்வம் எப்பொழுதும் உண்டு.  தான் உலக அழகி என்பதை உறுதி செய்ய ஒரு மாயாஜால கண்ணாடியை வைத்திருந்தார்.  அவ்வளவு காலமும் ராணியையே உலக அழகி என உறுதி செய்து கொண்டிருந்த மாய கண்ணாடி அன்று தன் நிலைப்பாட்டை மாற்றியது.

    ஏன் தெரியுமா... Snow White தன் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஒரு திருடனை பார்த்து விடுகிறார், இளவரசி என அறியாத அந்த திருடனும் சகஜமாக பேசுகிறான்.  நாட்டின் நிலையையும், மக்களின் தேவையையும் பற்றி பேசிக் கொண்டு நகர்கிறான்.  கோட்டை வீரர்கள் அவனை பிடித்து விட, பசியின் காரணமாகவே அவன் திருடியிருக்கிறான் எனவும், மன்னித்து விட்டு விடலாம் என இளவரசி ராணியை கேட்டு கொள்ள, கடுப்பான ராணி எந்த உணவும் கொடுக்காமல் அந்த திருடனை வாயிற் கதவில் கட்டிப் போட உத்தரவிடுகிறார்.  பதறிய இளவரசி பின்னர் யாருக்கும் தெரியாமல் அவனை விடுவித்து விடுகிறார்.  இளவரசியின் கனிவான குணமும், உதவும் மனமும் மாயாஜால கண்ணாடியை அதன் முடிவில் இருந்து மாற வைக்கிறது.

    உலக அழகி தான் என எண்ணிய ராணியின் கர்வத்தை அழிப்பது போல இச்சம்பவம் அமைந்து விடுகிறது.  போதிலும் ராணி ஸ்னோ ஒயிட்டை போல மாற எண்ணாமல் கொல்ல ஆள் அனுப்பி அந்த வீரனும் இளவரசியை கொல்ல விரும்பாமல் எங்காவது ஓடிச் செல்லும் படி கூறி விட்டு, தான் கொன்று விட்டாதாக ராணியிடம் பொய் சொல்லி விடுகிறார்.

    தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள காட்டினுள் சென்ற இளவரசியின்  கண்ணில் seven dwarfs (ஏழு குள்ளர்கள்) வீடு தென்படுகிறது.  அங்கு சென்று தங்குகிறாள்.  அவர்களுக்கு பூமியை குடைந்து வைரம் முதலான கற்கள் எடுப்பதுதான் வேலை.  சுருங்கச் சொன்னால் சுரங்க தொழிலாளர்கள்.

    இளவரசியை கண்டு முதலில் அஞ்சும் seven dwarfs பின்னர் அவளின் அன்பினில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.  எனினும் ராணியின் கோபம் தங்களை தாக்கும் அபாயம் இருப்பதால் இளவரசிக்கு தற்காலிக accomodation மட்டுமே கொடுக்கிறார்கள்.  அதுவே அவளுக்கும் போதுமானதாக இருக்கிறது.

    ராணியிடம் வீரன் பொய் சொன்னாலும் மாயக் கண்ணாடி இளவரசியின் இருப்பை உறுதி செய்து விடுகிறது.  கடுங்கோபம் கொண்ட ராணி தானே கொல்ல விளைகிறாள்.  இதனிடையே முன்பு அறிமுகமான திருடனை இளவரசி காட்டினுள் சந்திக்க நேரிடுகிறது.  அவனும் இளவரசிக்கு உதவி செய்ய முற்படுகிறான்.  தன்னுடைய நாட்டிற்கு விடிவு காலம் (முன்பு போல கூட்டமாக சேர்ந்து ஆப்பிள் pie செய்து சாப்பிடுவது) வேண்டுமென்றால் நாடு இளவரசியின் ஆளுகைக்கு உட்பட வேண்டும் என்பதே அவனது எண்ணம்.

    ராணியின் கொலை திட்டம்... மாறுவேடம் பூண்ட ராணி விஷம் கலந்த  ஆப்பிள் ஒன்றினை இளவரசியிடம் கொடுத்து சாப்பிட வைக்கிறாள்.  அவளது முயற்சி பலிக்கிறது, இளவரசி மூர்ச்சை அடைகிறாள்.  இதிலிருந்து தப்பிக்க உண்மையான அன்புடன் ஒருவர் கொடுக்கும் முத்தம் அவசியம் (காலக் கொடும ஹரி).  இதனை அறியா seven dwarfs அவளை எரிக்க முற்படுகிறார்கள்.   அங்கு சரியான நேரத்தில் வந்த திருடன் இளவரசியை தன் காதல் முத்தத்தால் காப்பாற்றுகிறான்.

    போர் ஒன்றுதான் தீர்வு என்றெண்ணி இளவரசி தன்னுடன் இருப்பவர்களை மட்டும் வைத்து தலைநகரை நோக்கி படையெடுக்கிறாள்; உடன் மக்களும் சேர்ந்து கொள்கின்றனர்.  எனினும் ராணியை எதிர்த்து போர் என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த அவள் போர் வீரர்களிடம் பேசுகிறாள்; ராணியை போல் அல்லாது அன்புடனும், அக்கறையுடனும் பேசும் இளவரசியை அனைவரும் ஏற்றுக் கொள்ள சண்டையே இல்லாமல் போரில் வெற்றி பெறுகிறாள்.  ராணியை வெளியேற்றி விட்டு, மீண்டும் மக்கள் ஆடல், பாடல், pie என சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கிறரர்கள்.  சுபம்!!!

Monday, 7 April 2025

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா, அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.
    பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று.
பேசுவதை தவிர்க்க காரணம்...
    எப்பொழுதும் நம்பிக்கையற்று வெறும் dry யாக அவன் பேச்சு இருக்கும், என்னால் இயன்ற அளவு நம்பிக்கை கொடுப்பேன், என்னாலும் அவ்வளவுதான் செய்ய முடியும். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் கொஞ்சம் கூட அவனுடைய அனத்தல்களை தாக்கு பிடிக்க முடியவில்லை.  அவன் உண்மையைதான் பேசுகிறானா அல்லது கற்பனை செய்து கொள்கிறானா (i know his condition, so i didn't think he lie about things) என தெரியவில்லை.  நேரடியாக சந்தித்து பேசினால் மட்டுமே உண்மை நிலை தெரியும் என எண்ணி, நானே நேரிடையாக சந்திக்க வருவதாக கூறினேன். தான் ஒரு remote placeல் இருப்பதாகவும், இன்னும் பல இத்தியாதிகளையும் சொன்னான்.
    பேச்சில் தெளிவில்லை, சொல்வது எதுவும் நம்புவது போல் இல்லை, நேரில் சந்திக்கவும் தவிர்க்கிறான்.  விஷயம் முழுவதும் தவறாக இருக்கவே நானாக அவனை எந்த வழியிலும் contact செய்ய முயற்சிக்கவில்லை, அவனும் அடுத்து எதுவும் பேசவில்லை. பின்னர் சில வாரங்கள் block செய்து வைத்திருந்தேன். 
    இப்பொழுது வேலைக்கு சென்று நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அவனுக்கு வேலை கிடைத்ததை என்னிடம் சொல்லாமல் அவனுடைய fantasy கதைகளை (பொய்) சொல்லி விரக்தியாக, வெறுப்பாக இருப்பதாக தொடர்ச்சியாக அனத்தி என்னை எதற்கு இம்சை செய்ய வேண்டும்?  அவனுடைய பேச்சு மிகவும் வித்தியாசமாக இருந்ததினால் அவனை தவிர்க்க block செய்து வைத்திருந்ததனால் எனக்கு guilty வேறு.
    Anyway, இவ்வளவு குயுக்தி எண்ணம் கொண்ட ஒரு நபரிடம் இருந்து நகர்ந்து வந்தது எனக்கு நன்மையே.  மேலும் பேச்சை தவிர்த்த குற்ற உணர்ச்சியும் இப்பொழுது இல்லை.  உன்னுடைய நிலையை எண்ணி உண்மையாக வருந்தி உதவ முயற்சித்த நபரிடம் சொல்லிருக்கலாம் தான் ஆனால் இப்படியாப்பட்ட எண்ண ஓட்டம் உள்ள ஒருவர் என்னிடம் எதுவும் பகிராமல் இருந்ததும் மகிழ்ச்சிதான்.
    காலம் அனைவரையும் தோலுரித்து காட்டி விடுகிறது.

Monday, 16 September 2024

புத்தகப் பருவம்... (பூமர்)

புத்தகம் நமக்காகான  ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம்.

நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல.  வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று.

எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை.

மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர்.

அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும்.  அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும்.

தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம்.  ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம்.  அதில் அவர்களுக்கு சரி தவறு தெரியாது என்பது உண்மைதான்.  அதனை கடக்க பெற்றோர் உதவி இல்லாமல் முயற்சிப்பது கடினம் என்பதும் அப்பட்டமான உண்மை.

ஆனால், எது முடியும் எது முடியாது என்பதை அவர்கள் எளிதில் கண்டு கொள்வார்கள்.  அவர்களின் எதிர்காலம் சிறப்பாக தேவை பெற்றோர்களின் அனுபவத்துடன் கூடிய பிள்ளைகளின் சுய சிந்தனை.

ஒருவர் பகிர்ந்தது: என் உடன் பயின்ற நண்பனொருவன் தனக்கு  பிடித்ததை செய்வான் (பெற்றோர் அனுமதியுடன்) யார் கிண்டல் கேளி செய்தாலும் (ஆசிரியர் உட்பட) கண்டுகொள்ள மாட்டான்.  அப்பொழுதே நெட்டில் எதை தேடினாலும் கிடைக்கும்.  ஆனால், தேடுவது உன் சாமர்த்தியம் என்றவன்.  அனைத்தையும் கம்ப்யூட்டரில் (நூலகம் தவிர்த்து) தேடுவதால் நாங்கள் அவனை சோம்பேறி என்பது மட்டுமல்லாது பிரவுசிங் சம்பந்தமான வேறு ஒன்றையும் இணைத்ததால் சில சங்கடத்திற்கும் உள்ளானவன்.  இப்பொழுது அவன் அவனுக்கு பிடித்த துறையில் உயர்ந்த பதவியில் உள்ளான்.  கேளி செய்தவர்கள் பலர் இப்பொழுது வியந்து கொண்டிருக்கிறார்கள்!  அவன் விரும்பி செய்தது வேறொன்றும் இல்லை கம்ப்யூட்டர் கேம்ஸ் மற்றும் பிரௌசிங்... அவன் விளையாட்டிலும் கலக்கினான் என்பது தனிக்கதை.

Thursday, 12 September 2024

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆ 

ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக...

தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில்.

Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்!

இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன்.

ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது.

நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே!

ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். மழை வெளுத்து வாங்கியது, பயண நேரத்தில் மூன்றில் இரண்டை மழைக்காக ஒதுக்கிவிட்டார். ஆம், ராஜா மாதிரி அல்லாமல் மஹாராஜாவைப் போல செல் என்றது மழை... 

Thursday, 21 September 2023

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது.

மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது.

மௌனத்தை பழகிக்கொண்டான்.

தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள்.

இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள்.

நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள்.

ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள்.

அவனும் மௌனத்தை கலைத்தான்.

அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.


Monday, 20 March 2023

90's கிட்

 டீக்கடை, காலை 6:30...  இன்னும் எத்தனை காலத்துக்கு சைக்கிளை மிதித்து கொண்டிருப்பாயென அவரை ஒருவர் இடைமறிக்கும் போதுதான் கவனிக்க நேர்ந்தது.  அவரின் தோற்றத்தை வைத்து வயது 30+ என சொல்லலாம்.  இல்லண்ணே என ஆரம்பித்த அவர், இதுவே போதுமானதாக இருப்பதாக அர்த்தமளிக்கும் ஒன்றினை அவர் பேசி முடிக்கும் போது என் டீ ஆறிவிட்டது.  ஒரே விஷயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதமாக சொன்னார்.  அது முற்றிலும் இயலாமை சம்பந்தபட்ட விஷயம்.  வார்த்தைகளின் ஊடே அந்த இயலாமை மறைந்து இருந்தது, அவரின் பேச்சின் வீரியத்திற்கு பயந்து வெளிவர தயங்கியது என்பதே உண்மை.

வண்டியை பற்றிய பேச்சு இப்பொழுது கல்யாணம் நோக்கி திரும்பியது.  வரும் மாரியம்மன் கோவில் பொங்கலுக்குள் கல்யாணம் பண்ணி ஜோடியாக இதே ரோட்டில் அப்படி கெத்தா நடப்பேன் பாருங்கன்னு அவர் சொல்லும் தொனிக்கு கண்கள் சிறிது கலங்கியது என்னமோ உண்மை.  எப்படி என விளக்க தெரியவில்லை, காரணமும் புரியவில்லை.




தன் அண்ணனின் கல்யாணத்தில் லட்சம் செலவானதென வருத்தப்பட்டார்.  கோடீஸ்வரன் கல்யாணத்துல கூட பாதாம் பால் வைக்க மாட்டாங்க.  ஆனா, இவன் வீம்புக்குனே வச்சான்... அதுல பாதி யாரும் குடிக்காம கெட்டு போயிடுச்சென வருத்தப்பட்டார்.  இப்ப இருக்குற வீட்ல ஒரு ரூம் மட்டுந்தான் இருக்கு, அதுல குடித்தனம் பண்ண முடியாது வேற வீட்டுக்கு போகணும்னா கையில கொஞ்சம் காசு வேணும்.  அப்புறம் வீட்டுல செல்ஃப் இருந்தாலும் ஒரு பீரோ கட்டாயம் வாங்கிடணும்னு இருக்கேன்னு சொல்லிட்டு இருந்தார்.  சிறிது நேரம் கழித்து தான் புரிந்தது, அவர் சொன்ன ஒரு ரூம் என்பது மொத்த வீடென்று.  

எப்பொழுதும் மனதில் ஆயிரம் கேள்விகள் சம்பந்தமில்லாமல் எழும், அவற்றில் சிலவற்றை இங்கிதம் சற்றுமின்றி கேட்டதும் உண்டு.  ஆனால், இது சத்தம் ஏதுமின்றி சூன்யம் மட்டும் இருப்பது போன்றதொரு நிலை.  நகரம் எப்பொழுதும் போல் நகர ஆரம்பித்தது.

Saturday, 11 March 2023

ரயில் பயணம் ...

குழந்தைகளுக்கே உரித்தான கன்னமது, கொழுக்மொழுக்கென.  பால் கன்னம் என்பார்கள்.  குழந்தைகளின் கன்னங்கள் கிள்ளப்படுவதற்கான முக்கிய காரணி, அவனுக்கும் இருந்தது.

இரண்டு வயதிற்கு மேல் இருந்திருக்காது, அவனுடைய அண்ணனும் அம்மாவும் ஜன்னலே கதி என்று கிடக்க, சீட்டில் இவனுக்கு இடம் தாராளமாக இருந்தது.

கையில் கவர் பிரிக்காத ஒரு சாக்லேட் வைத்துக்கொண்டு எங்களுக்கு வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். என்னையும் சேர்த்து நால்வரின் கவனமும் அவன் மீது இருந்ததை  கண்ட அவனது அம்மா நாங்கள் பார்த்து கொள்வோம் என்றெண்ணி அதன் பின்னர் அவனை கண்டுகொள்ளவில்லை. 

அவனுடைய அம்மாவும், அவரது இன்னொரு மகனும் சேர்ந்து ஜன்னலிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.  பின்னர், இருவர் கூட்டணியில் மூன்றாவதாக அவனும் இணைந்து கொண்டான். 

அது இவ்வளவு நேரம் எங்கே மறைந்திருந்தது எங்கிருந்து வந்தது என யோசிக்க கூட எங்களுக்கு அவன் அவகாசம் கொடுக்கவில்லை.  ஆம், அவன் தூங்கிவிட்டான்.

திண்டுக்கல் ரயில் நிலையம்!? அங்கே மழை பெய்து கொண்டிருந்தது, பெய்து கொண்டே இருந்தது... வருணனுக்கு அன்று மனநிலையில் சிறிது யோசனைகள் போலும்? வெட்ட வெளியில் இரண்டு நிமிடங்கள் வரைக்கும் நின்று கொண்டிருந்தேன்.  மழை பெய்து கொண்டுதான் இருந்தது, என்னை நனைக்காமல் அவ்வளவு மெலிதாக!

Disney's Snow White

      திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்க...